Wednesday, September 17, 2008

சத்திய வேள்வி - 1987


"நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்
நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை"

இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தியாகவேள்வி அது. அந்த வேள்வியிலே தன்னையே தீயாக்கியும் தன்னையே ஆகுதியாக்கியும் ஈழத்தமிழர் இடர் இன்றி வாழ சாகத்துணிந்த அண்ணன் திலீபன், பன்னிரு நாள் வேள்வியிலே அணுஅணுவாய் தன்னை மாய்த்து மக்கள் மனங்களில் மறையாத மாவீரன் ஆனான்.

நினைவு நாளின் நான்காம் நாள் இன்று. நல்லை நகர் வீதியில் முன்பெல்லாம் நினைவு நாட்களின் போது அடையாள உண்ணாவிரதம் நடக்கும். பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் மூன்று தடவைகள் சென்றிருக்கிறேன். மேடையில் கவிதைகள், பேச்சுகள், நாட்டிய நாடகங்கள் நடக்கும். உச்சக்கட்டமாக திலீபனை எமைக்காத்த இறைவனாக வரிந்து காவடிகள், பறவைக்காவடிகள் போன்றன வரும். மேடையிலே ஆடுவார்கள். மாலைநேரத்தில் தொலைக்காட்சியிலே திலீபன் சம்பந்தமானதும் போராட்டம் சம்பந்தமானதும் ஒளிப்படக்காட்சி இடம்பெறும். அற்புதமாகவும் மனதைப் பிசைவனவாகவும் இருக்கும். இறுதியாக பழரசம் தந்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்படும். அறியா வயசில் சென்றாலும் இன்னமும் மனதில் பதிந்துள்ளது.

திலீபன் யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவன். படிக்கும் காலத்திலேயே அவன் படு கெட்டிக்காரன். இவனைப் பற்றி கலாவினோதன் சின்னமணி கே.என்.கணபதிப்பிள்ளை தன்னுடைய திலீபன் நினைவு வில்லிசையில் 1988ம் ஆண்டு சொன்னது இப்போதும் நினைவில் உள்ளது

சதுரங்க விளையாட்டுப்பிள்ளை - திலீபன்
சதுரங்க விளையாட்டுப்பிள்ளை - தெருவிலே
ஆமிக்கு ஒயாத தொல்லை.

தீராத விளையாட்டுப்பிள்ளை பாடலை தன்னுடைய வில்லிசைக்கு ஏற்றாற்போல மாற்றிப்பாடினார்.

திலீபனைப்பற்றி அறிந்தவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். மெலிந்த தேகம் கொண்டவர். வல்லவர். மிகவும் சாதரணமாக எல்லோருடனும் சிரித்தமுகத்துடன் பழகுவாராம். அதுதான் அந்த சிரித்த முகத்தை இப்பொழுதும் காணலாம் யாழ்.மருத்துவ பீட வளாகத்தில் அவரது உயிரற்ற உடலில். இறந்தபின்னும் வாழ்வதென்பது இதுதானோ. வாழும் போதும் தமிழ் மக்களுக்காய். பின்னர் மாவீரனாகி மக்கள் மனங்களில் வாழும் போது மாணவர்களுக்காய் வாழ்கிறானே. இதுவரை இப்படி ஒரு உயிர், உடல் கொடையாளியை நான் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை.

மிகச்சிறந்த பேச்சாளன். அவனது வெள்ளை உடையுடனான ஒரு நினைவுத்தாள் முன்பெல்லாம் ஒட்டப்பட்டிருக்கும். அதிலே அவன் கோட்டையை நோக்கி கையை நீட்டியவாறு ஒலிவாங்கி முன்னாலே பேசுவது போல இருக்கும். ஆம் " இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ, அன்றுதான் எமக்கு விடிவு. அன்றுதான் எமக்கு சுதந்திரம்" என்று பேசிய அந்தக் காந்தக்குரல் இன்னமும் காதில் ஒலிக்கிறது. சரியாக மூன்று ஆண்டுகளின் பின்னர் 1990ல் திலீபனின் நீனைவு நாளான 26ந் திகதி அந்தக்கோட்டை விடுதலைப்புலிகள் வசம் வீழ்ந்தது.

அவனை பாரதம் புதைக்க அவனுக்காக அமைத்த நினைவுத்தூபியை சிங்களம் நொருக்கியது. மனிதம் ஈழத்தில் செத்துவிட்டது. இப்போது திலீபனின் உண்ணாவிரத மேடை அமைந்த பகுதியில் ஒரு சிறிய கருங்கல்லால் ஆன நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. நல்லூர்க்கந்தன் ஆலய அறங்காவலரின் அனுமதி இதற்கு கிடைத்தது பெரிய மகிழ்ச்சியே.

திலிபன் நினவுப்பாடல். வாணிஜெயராம் பாடியது. இதோ......



அட புன்முறுவல் பூத்த பூமுகத்தை கருக்கி விட்டார்களே. அமைதி என்று வந்து அராஜகம் புரிந்த அந்நிய தேசம் எம்வீரமகனை உருக்குலைத்துவிட்டதே. அதன் நினைவாக கிறுக்கியது இது.

=====================================================

ஓர் ஆறுமுகத்தானின் தேர் ஓடும் வீதியிலே
ஊர் முழுதும் புடைசூழ உத்தமனாம் பார்த்திபன்
வேர் அறுந்து வீழ்ந்ததுபோல் வீரமரணம் ஆகியது
பார் முழுதும் தமிழர்களை பரிதவிக்க விட்டதுவே!

வெள்ளைக் கொடி காட்டி விழுவாரை வரவேற்று- நாங்கள்
கள்ளுண்டது போல் களிப்பில் இருந்திட்ட போது
கொள்ளையில போவாரின் கோரத்தனத்தால் - எங்கள்
பிள்ளை திலீபன் எம்மை பிரிந்து போனானே!

காந்தியை தாங்கள் தந்த தேசமாம் - எங்கள்
சாந்தியை நாட்ட வந்த தேசமாம் - உங்கள்
காந்தியை கொன்றதும் உங்கள் தேசமே -எங்கள்
சாந்தியை கொன்றதும் உங்கள் தேசமே!


என்ன கேட்டோம் உன்னை
நீ இப்படிசெய்வதற்கு!
சொன்ன சொல்லை காத்த
திலீபன் எங்கே!
காந்தி வழி வந்த கயவர்
நீங்கள் எங்கே!
அகிம்சை என்றால் என்ன என்று
அறைந்து சொல்லியிருக்கிறோம்
இம்சை கொடுக்காமல் இனியேனும்
இறங்காமல் எட்டாவாயிரு!


ஒரு தலைவன் போனதற்காய் - நீங்கள்
பெரு ஓலம் இட்டு நின்றால் - எங்கள்
தரு ஆகிநின்ற தளப்திகளையும் - அவர்களோடு
கரு ஆகிநின்ற களப்போராளிகளையும் - இவர்களை
உரு ஆக்கிநின்ற எம் மக்களையும்
என்ன செய்தாய்?
வதைத்தாய்! வயிறோடு நின்றவளை
உதைத்தாய்! ருது ஆகாவிட்டாலும் அவளை
சிதைத்தாய்! உயிரோடு கொன்று
புதைத்தாய்! நடுவீதியில் எமை சுட்டு
நகைத்தாய்! எம் இரத்தம்
குடித்தாய்! தார் ஊற்றி எமை
எரித்தாய்!

முற்பகலில் எமக்கு இழப்பைத்தர
பிற்பகலில் உனக்கு இழப்பு.

ஒரு உயிர் போனதற்கு - உங்களுக்கு
ஒரு பத்தாயிரம் உயிர் என்றால் - எங்கள்
ஒரு பத்தாயிரம் உயிர் போனதற்கு - உங்கள்
ஒரு உயிர் போதும்தானே!

===================================================
இந்த இந்திய இராணுவக் கொடுமை பற்றிய பாடல்......




இந்த தூபி உடைத்துவீழ்த்தப்பட்டது 1995ல். பின்னர் மீண்டும் 2002ல் மறுசீராக்கம் செய்யப்பட்டது.
=====================================================================

நன்றி : தூயா

6 comments:

said...

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று அவன் சொன்ன நாள் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் வருகிறது.

ஆயுதம் ஏந்தாதவன் அகிம்சை போராட்டம் செய்வதைவிட உயர்ந்தது ஆய்தம் தரித்தவன் ஒருவன் செய்த அகிம்சை போராட்டம். அதன் உச்சகட்ட உதாரணம் தான் திலீபன். கவிதை நல்லாக உள்ளது. உள்ளே கனல்வது வேள்வி நெருப்பன்றோ

said...

//..அருண்மொழிவர்மன் பகிர்ந்தது..
ஆயுதம் ஏந்தாதவன் அகிம்சை போராட்டம் செய்வதைவிட உயர்ந்தது ஆய்தம் தரித்தவன் ஒருவன் செய்த அகிம்சை போராட்டம்............//

அகிம்சைப்போராட்டம் செய்தவர்களை எடுத்துப்பார்த்தால் திலீபன் ஒப்பற்ற உயர்ந்த சிகரத்தில் உள்ளான். எவரும் அவனை எட்டமுடியாது. சாவை ஒவ்வொரு கணமாய் நுகர்ந்தவன். எப்படி அவனை சாவு நெருங்கியிருக்குமோ தெரியாது. நன்றி வருகைக்கும் இடுகைக்கும்.

said...

நினைவுகள் அப்படியே பசுமையாக இருக்கின்றன, நிதர்சனமும் தன் ஓளிபரப்பில் திலீபன் அண்ணாவின் அகிம்சைப் போராட்டத்தை பறை சாற்றிக் கொண்டிருக்க, கவிஞர் வாஞ்சி நாதன், புதுவை அண்ணர் போன்றோர் கவிபாடியது. செழித்த பயிர் ஒன்று மெல்ல மெல்ல களைத்துச் சாய்ந்த வலியையும் கண் முன்னே பார்த்த அந்தக் கணங்களும் வேதனையானவை. திலீபன் கண்ட கனவு நிறைவேற வேணும்,

தகுந்த நேரத்தில் வழங்கிய பதிவுக்கு மிக்க நன்றி சகோதரனே

said...

//இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ, அன்றுதான் எமக்கு விடிவு. அன்றுதான் எமக்கு சுதந்திரம்" என்று பேசிய அந்தக் காந்தக்குரல் இன்னமும் காதில் ஒலிக்கிறது//

குரல் ஒலிக்கும்

எம் குலம் ஜெயிக்கும்!

said...

நன்றி கானா பிரபா,

குரல் எடுத்ததோர்
குயில் படுத்தது.
குமுறி நின்றதோர்
புயல் படுத்தது.
தர மறுத்திடும் உரிமை பெற்றிட
தன் வயிற்றிலே போர் தொடுத்தது.

வார்த்தைகள் போதாது தியாகத்தைச்சொல்ல.

said...

வணக்கம் ஆயில்யன்,

நிச்சயமாக நம் இனம் வெல்லும். இப்படியான தியாகங்கள் அதை மேலும் வலுப்படுத்தும். விரைவில் அதற்கான காலத்தை எதிரியானவர்களே ஏற்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன்.

சாவு தின்றதே!
சாவு தின்றதே!
தங்க மேனியை
சாவு தின்றதே!

நன்றி வருகைக்கு ஆயில்யன்.