Thursday, July 05, 2007

கரும்புலிகள் தினம் - ஆடி 05

தேசம் விடிய தீயாகி எழுந்து - எதிரிக்கு
நாசம் விளைவித்த நாயகரே!
வீசும் காற்று சொல்லுது உம் வீரம் - உயிரை
தூசாய் மதித்த உத்தமரே!

உணர்வை உசுப்பி
உயிரைப் பிழியும்
உன்னத கூட்டம் - நீங்கள்
தமிழர் தலையை நிமிர்த்தி
தரணியை மீட்கும்
தற்கொடைக் கூட்டம்!

நாங்கள் வாழ தங்கள் வாழ்வைத்தந்த வீர புருஷர்களின் வீர தினம் இது. அவர்களின் தியாகத்தில் குளிர்காயும் நாம் இந்த நாளில் அவர்களை ஒரு கணம் நினைந்து அஞ்சலி செலுத்தி
எங்கள் அக வணக்கங்களை செலுத்துவோம்.

"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"
-------------------------------------

கரும்புலிகள் நினைவாக 1994ம் ஆண்டு வெளிவந்த உயிரை உருக்கும் பாடல் இது. வீர காவியமான எல்லாக் கரும்புலிகளுக்கும் சமர்ப்பணமும் அஞ்சலிகளும்.




ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.


வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!


தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!


தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!


நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!

பாடல் : புதுவை இரத்தினதுரை
பாடியவர் : மாவீரர் மேஜர் சிட்டு
இசை : இசைவாணர் கண்ணன்

Tuesday, May 22, 2007

மனதார போற்றுவோம்.....!

காற்றோடு காற்றாகி
கலந்து போனவர்கள்!
        கடலென்ன தரையென்ன
        காவியங்கள் படைத்தவர்கள்!
விடுதலை வேள்விக்காய் தம்மை
விறகாய் எரித்தவர்கள்!
        வீறு கொண்டு தமிழினம் எழ
        வெடியாய் வெடித்தவர்கள்!
சாகும் தேதி தெரிந்தும்
சலனமின்றி திரிந்தவர்கள்!
        கணப்பொழுதும் பிரியாமல்
        கந்தகத்துள் வாழ்ந்தவர்கள்!
வாழத்துடிக்கும் தமிழினத்திற்கு புது
வரலாறு வகுத்தவர்கள்!
        சாவு என்ற ஏட்டிற்கு புது
        சரித்திரம் சேர்த்தவர்கள்!
மாற்றானின் பலத்தையெல்லாம்
மண்ணுக்குள் புதைத்தவர்கள்!
        எச்சமின்றி எதிரியை அழிக்க
        எரிமலையாய் பொங்கியவர்கள்!
பூவாய் வாழ்ந்து
புயலாய் எழுந்தவர்கள்!
        புன்முறுவலோடு புறப்பட்டு
        பூகம்பமாய் வெடித்தவர்கள்!
மண்ணுக்கான மரணம் என
மகிழ்வாய் ஏற்றவர்கள்!
        தலைவன் சொல்லே வேதமென
        தற்கொடையாளர் ஆகினர்!

-வார்த்தைகளுக்கள் வந்து அமர்ந்து விட முடியாத வாழ்க்கைதான் கரும்புலிகள் வாழ்க்கை. அந்த புனித தெய்வங்களின் நினைவாக எழுதியது இது. எவருமே நினைத்து பார்க்க முடியாத வீரம், சாவை தாமே சென்று அணைக்கும் அற்புதம். உத்தம வீர புருஷரை உள்ளத்தில் இருத்தி உளமார போற்றுவோம்!-