Friday, August 01, 2008

பாட்டு தந்து...எம்மை விட்டு....பறந்த சிட்டு....!

ஒரு அழகிய பகற்பொழுது. அது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபம். சமகாலக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு போராளிகள் எமக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஒரு போராளி கேட்டார் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எம்மிடம் கேளுங்கள். தயக்கம் இருந்தால் ஒரு சிறிய கடதாசியில் எழுதி முன்னாலே அனுப்புங்கள். நிறைய கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பதில்கள் கிடைத்தன.ஒரு மாணவன் கேட்டிருந்தான் அண்ணா ஒரு பாடல் பாடிக்காட்டுங்கள்? நான் நினைத்தேன் ஏன் இவன் இப்படி கேட்கிறான் என்று. அப்ப அந்த போராளி அண்ணா சொன்னார் கருத்தரங்கு முடியும் போது பாடுகிறேன். நான் எதையும் நினைக்கவில்லை. பின்னர் முடியும் தறுவாயில் புன்முறுவல் பூத்த முகத்துடன் "சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்...." என்ற "உயிர்ப்பூ" படப்பாடலை பாடினார். அப்போதுதான் தெரிந்தது இவர்தான் போராளிப்பாடகர் சிட்டு என்று.

அந்த பாடலை கேட்க.....


"ஜெயசிக்குறு" என்று புறப்பட்டு தமிழரின் தலை கொய்வேன் என்ற சிங்களத்துச்சேனை அடிவாங்கி அடிவாங்கி ஆமையாய் நகர்ந்து வன்னியின் கழுத்தை நெரிக்க முற்பட்டது. பிஞ்சும் பழமும் களமுனையில் வெஞ்சமராடிய காலம். எம் விடுதலை சேனையோ தடுத்து நிறுத்த முழுப்பலத்தையும் பிரயோகித்த நேரம். காலம் அவனையும் களமுனைக்கு தள்ளியது. குரலால் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த போராளி, இப்போது குண்டுகளால் எதிரியை திணறடிக்கிறான். மண்ணை காக்கும் பணியில் மாவீரனாகிறான். மாவீரன் சிட்டு வித்தாக விழுந்த தினம் இன்றுதான்(01.08.1997). பதினொரு வருடங்கள் பறந்துவிட்டன. மனதை விட்டு பறக்காமல் எம்முள் வாழ்கிறான் சிட்டு.

செங்கதிரின் "கண்ணீர்ரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்...." என்ற பாடலுக்கான மெட்டுத்தான் எமக்கு சிட்டுவை ஒரு பாடகனாக தமிழீழ மண்ணிற்கு தந்தது. ஒரு போராளிப்பாடகன். இவன்தான் நிறைய போராளிகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தான். இப்போதெல்லாம் நிறைய போராளிக் கலைஞர்கள் உருவாகிவிட்டார்கள். இவற்றிற்கெல்லாம் அடிநாதம் எங்கள் சிட்டு.

கேணல்.கிட்டு வீரச்சாவு அடைந்த உடன் செய்தி மட்டுமல்ல உருவாகிய பாடலும் உள்ளத்தை பிசைந்தது. முதலில் வந்த "தளராத துணிவோடு களமாடினாய்......" என்ற பாடலை பாடியவர் மேஜர் சிட்டு. அற்புதமான பாட்டு. பின்னர் நெய்தல் ஒலிப்பேழையில் எஸ்.ஜி.சாந்தனுடன் இணைந்து "வெள்ளி நிலா விளக்கேற்றும் பாடல்...." கரும்புலிகள் ஒலிப்பேழையில் "ஊர் அறியாமலே உண்மைகள் உறங்கும்..." என்ற தொகையறாவுடன் தொடங்கும் "சாவினைத்தோள் மீது தாங்கிய ...." என்ற பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.


















சாவினைத்தோள் மீது என்ற பாடல்.........


தளராத துணிவோடு களமாடினாய்.........


எங்கே எங்கே வேங்கைகள் எங்கே இந்திய அரசே ......




பூநகரி வெற்றிப்பாடல் "சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா கவிஞா.." என்ற பாடலை மீண்டும் சாந்தனுடன் பாடி புகழ் அடைந்தார். இவரது நிறைய பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.

இசைபாடும் திரிகோணம் ஒலிப்பேழையில் இடம்பெற்ற "கடலின் அலை வந்து தரையில் விளையாடும்..." என்ற பாடலும் அதே தொகுப்பில் 'ரணசுரு','சூர்யா',உட்பட 3கப்பல்களை தாக்கியளித்த கரும்புலிகள் நினைவாக வந்த "விழியில் சொரியும் அருவிகள்...." என்ற பாடலும் மிக உருக்கமானவை. இந்த கரும்புலித் தாக்குதலுடன்தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.

பாட்டுகள் தந்த எங்கள் சிட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு நினைவுப்பாடல்....


ஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என் எல்லோரும் வேண்டுகின்ற "தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன்ப்பேழைகளே........." என்ற துயிலும் இல்ல பாடலுக்கும் சிட்டு குரல் கொடுத்துள்ளார். முன்னர் இப்பாடலின் சரணத்தில் "..நள்ளிராவேளையில் நெய்விளக்கேற்றியே நாம் உம்மை பணிகின்றோம்..." என்ற வரி பின்னர் காலச்சூழ்நிலைக்கேற்ப மாற்றப்பட்டு விட்டது.

நெஞ்சைப்பிழியும் நினைவு ஒன்று. சிட்டு களத்திற்கு போக தயாராகிறான். அவனது போராளி நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் உனக்கு பிடித்த பாடல் ஒன்றை எமக்காக பாடு என்று. எல்லாம் நினைத்து நடப்பதில்லை. ஏன் அப்படி கேட்டார்களோ தெரியாது. ஆனால் சிட்டு இதே துயிலுமில்ல பாடலையே நண்பர்களுக்காக இறுதியாக பாடினானாம். எல்லோரும் அழுது விட்டார்களாம். இப்போது அந்நண்பர்கள் செங்களம் மீதிலே உன்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை ஒரு போராளி நண்பர் பகிர்ந்து கொண்டார். மனதைப்பிழியும் நினைவு ஒன்று. அந்தப்பாடல் துயிலும் இல்லத்துக்கு மட்டுமே உரியது என்பதால் இங்கே தரமுடியவில்லை.

காலம் முழுவதும் வாழ்வான் சிட்டு எங்கள் நெஞ்சைப்பிழியும் பாட்டுக்கள் மூலம்.

நன்றி: பூராயம்,தமிழ்ப்புலிகள் போன்ற வலைப்பூக்கள்.