
ஈழமெங்கும் இன்று சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டிருக்கும். ஒலிபெருக்கி எல்லாம் வாணி ஜெயராமின் "நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்" பாடல் ஒலிக்கும். எல்லா வீடுகளின் முன்பாகவும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலிபனின் நினைவுப்படத்திற்கு மாலை போடப்பட்டு மலர்கள் தூவப்பட்டிருக்கும். மக்கள் முகங்கள் இறுக்கமாக இருக்கும்.
ஆம் இன்றைக்கு 21ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இந்தியா எம்மை கழுத்தறுத்தது திலீபனின் உயிரைப்பறித்து. ஒரு துளி நீரும் இன்றி தவம் கிடந்தான் தேரடி வீதியிலே. அவனோடு சேர்ந்து அவன் உயிருக்கு உயிராக நேசிக்கும் உன்னத மக்களும், அவனை உயிராய் மதிக்கும் மக்களும் வெயில்,மழை பாராது வேலவனின் வெள்ளை மணல் மீது காத்திருந்தனர். உப்புச்சத்தியாக்கிரகம் இருந்து வெள்ளையர்களிடம் மதிப்பு பெற்ற காந்தி வாழ்ந்த தேசம், இவனோ துளி நீர் கூட இல்லாமல் இருக்கிறான். இது அவர்களுக்கு கௌரவப் பிரச்சினை. எப்படியும் எம் தீலீபனை எம்மிடம் தருவார்கள் என்ற நம்பிக்கை 12நாள் இருந்தது. பின்னர்தான் தெரிந்தது. கயவர் நெஞ்சம். வல்ல திலீபனை வஞ்சனையால் விழ்த்தியது பாரதம்.
அட தங்கள் காந்தியை மிஞ்சப்போகிறானே என்று கிஞ்சித்தும் அவர்களிடம் பயம் இல்லை. இவர்கள் காந்தி மீது உண்மையிலேயே பாசம் இல்லையா?. அல்லது எம்மை அழிப்பதென்றால் காந்தி என்ன கடவுளே வந்தாலும் தம்மை நிறுத்த முடியாது என்கிறார்களா?
புரியவில்லை.
2005ம் ஆண்டு நல்லூர் வீதியில் நானும் நண்பனும் திலீபனின் இறுதிநாள் நிகழ்வில். ஒலிவாங்கியில் ஒருவர் மிக மிக மிக உணர்வாக கதைக்கிறார். "நேரம் 10.40 இந்த நேரம் எல்லாம் திலீபன் துடிக்கிறான். மரணத்துடன் உச்சக்கட்டமாக போராடுகிறான். எமது திலீபன் எம்மை விட்டு பிரியும் நாளிகை நெருங்குகிறது. அன்பான மக்களே! உங்கள் திலீபன் பிரிந்த கணப்பொழுதில் நாம் நிக்கிறோம். பாரத தேசம் எங்கள் திலீபனை பறித்தெடுத்துவிட்டது. நேரம் 10.48. அன்பான மக்களே! திலீபன் எங்களை விட்டு பிரிகிறான். அவனை நினைத்து இரண்டு நிமிடம் மௌண அஞ்சலி செலுத்துவோம்" எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். நிசப்தம். என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. விழிகள் கசிந்து ஓரமாக ஓடுகிறது. நெஞ்சு எல்லாம் கனத்துப்போனது. தொண்டை அடைத்தது. வார்த்தைகளுக்குள் அமராத சோகம்.
மருத்துவர் சிவகுமாரே முதலில் திலீபன் எம்மை விட்டு சென்றான் என்பதை அறிந்தவர்.ஆனால் எவருக்கும் சொல்ல அவரால் முடியவில்லை. காலைத்தொட்டு எம் தெய்வத்தை வணங்கி குலுங்கி குலுங்கி அழுத போதே நல்லூர் அதிர்ந்தது. எங்கும் ஓஓஓ என்ற அழுகுரல். விம்மி நெஞ்சு வெடித்தது.
உனக்கு ஆங்கிலேயன் அந்நியன் என்றால் எமக்கு நீ அந்நியன்தான். நெஞ்சைப் பிழியும் நினைவு. மனதை உலுக்கும் நினைவு.
ஊரெழுவில் பூத்தகொடி வேரிழந்தது........... இது ஒரு அற்புதமான பாடல்.
பாடலை கேட்க............