Sunday, November 19, 2006

அரைமணி நேரம் வந்து
அமைதியாய் இருந்து விட்டுப்போ...........

மங்கும் மாலையென
மயங்கி இருந்து விடாதே!
கார்த்திகை குளிரென
கம்பளிக்குள் சுருண்டு விடாதே!
பொங்கும் உணர்வோடு
புறப்பட்டு வா!
நெய் விளக்கு ஏற்ற வேண்டாம்!
நெடு நேரம் நிற்க வேண்டாம்!
அரைமணி நேரம் வந்து
அமைதியாய் இருந்து விட்டுப்போ.....!
போகும்போது பார் தேகமெல்லாம
புல்லரித்து போய்விடும்.
வந்து பார்!
கல்லறைகளுக்கு முன்னால்
கண்மணிகளைப் பெற்றோர்,
கண்ணீரால் கழுவியபடி...
மலர் தூவி மாலை சூடி
மாணிக்கங்களை மனதார பூசிப்பர்.
அன்புச்செல்வங்களை ஆரத்தழுவுவர்.
மற்றவர்க்காய் மடிந்த மணி
இருந்தாலும்........
பத்து மாதம் சுமந்து பெற்ற
பிள்ளையடா........
பிரிவுத்துயர் இராதா ?
உற்றார் உறவினர்
நண்பர் எல்லாம் - அந்த
உயர் நாளிகைக்காய் காத்திருப்பர்.
தலைவன் உரை கேட்க
தரணியே தவமிருக்கும்.
உரை முடிந்ததும் உணர்வுகள் பொங்கும்.
உள்ளங்கள் குமுறும்.
மணியொலி கேட்கும் - அதை
விம்மல்கள் அடக்கும்.
கல்லறை கீதம் காற்றினில் தவழும்.
கல் நெஞ்சனையும் அது கசிய வைக்கும்.
கணப்பொழுதில் நெஞ்சம்
கனத்துப் போய்விடும்.
நெய் விளக்கு நெடிகள்
நெஞ்சை நெகிழச் செய்யும்.
விம்மும் குரல்கள் கேட்டு
நெஞ்சம் வெடித்திருக்கும்.
கல்லறைகளுக்கருகே தென்னங்கன்றுகள்!
இது கல்லறைகள் அல்ல கருவறைகள்.
இவர்கள்
புதைக்கப்பட்டவர்கள் அல்ல விதைக்கப்பட்டவர்கள்.
விதைத்ததுகள் நாளை விருட்சமாகும்.
அவையெல்லாம்
விடுதலையை விரைவுபடுத்தும்.
புண்ணிய வீரர் எண்ணியதை - நாளை
புலிச்சேனை முடித்து வைக்கும் - என்ற
திண்ணிய நெஞ்சுடன் எம் தலைவன்
திறம்படச் செய்வான்.
இந்த எண்ணத்துடன் வீடேகுவர்
மற்றோர் மற்றும் மாவீரரைப் பெற்றோர்.
விரலிடுக்கில் தென்னம்பிள்ளைகள்.
அதுவும் விடுதலைக்காற்றை எம்மோடு
நாளை சுவாசிக்கும்.
எதற்கும் நீயொரு தடவை
வந்து பார்!.

(நவம்பர் 27ந் திகதி மாவீரர் தினத்தன்று
மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெறும் நிகழ்வின்
நினைவாக வரைந்தது)